Main Content

புராண வரலாறு

இந்த திருமலைராயன்பட்டினத்தில் பார்க்கும் இடமெங்கும் கோயில்கள் குளங்கள் என 108 கோயில்களும் 108 குளங்களும் கொண்டு சிறப்புற விளங்கி வருகிறது இதில் நடு நாயகமாகக் குடி கொண்டு அணைவருக்கும் நல்லருள் புரிந்து வருபவள் அருள் மிகு ஆயிரங்காளியம்மன் ஆவாள். அன்னைக்குப் படைக்கப்படும் பொருள்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரமாக படைகப்படுவதால் அன்னைத் திருப்பெயர் ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் கலிங்கத்தை ஆண்டு வந்த அரசன் ஒருவன் தன் நாடு வளமாகவும், நலமாகவும் செல்வச் செழிப்புடனும் இருந்திட அன்னை காளி தேவியை உருவாக்கி நாளும் அவளுக்கு பூசை பல செய்தும் ஆயிரமாயிரம் பொருட்களும் பழங்களும், மலர்களும், சித்திரான்னமும் செய்து வழிபட்டு வந்தான்.

அந்த மன்னனின் இறுதி காலத்தில் அவன் கனவில் தோன்றி மகனே நீகவலை படாமல் என்னை ஒரு பேழையில்(பெட்டு) வைத்து கடலில் விட்டு விடு நான் வேறு இடம் சென்று கோயில் கொண்டு தங்குவேன் என்று கூறினாள் மன்னனும் அவ்வாறே செய்தான்.

அந்தப் பெட்டியும் திருமலைராயன்பட்டினக்கரையோரம் மிதந்து வந்து சேர்ந்தது கிழக்கில் வசிக்கும் மீனவர்களுக்கு அகப்படாமல் இருந்து வந்தது.

இந்நகரில் வசித்து வரும் மக்களில் செங்குந்த குல மரபினர் குலப் பெரியவர் கனவில் அன்னைத் தோன்றி நான் மன்னவனின் குல தெய்வமாக இருந்துவந்தநான் இப்பொழுது கடலில் தவழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை நீ வந்து அழைத்து எடுத்துச் சென்று வழிபாடு செய் என்று கூறினாள்.

மறு நாள் காலை குலபெரியவர் சமுகத்தின் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு கடற்கரைச் சென்று மேளதாளம் வாத்தியம் முழங்க அன்னையை அழைத்தார் அன்னையும் அவரின் அருகில் வந்து கரை சேர்ந்தாள் இருந்த பேழையினை செங்குந்த குலத்தவர் சிரமீது தாங்கி வந்து ஊரில் கொண்டு வந்து சேர்த்தனர்.

பின்பு அன்னையிருந்து வந்த பேழையினை திறந்து பார்த்து அதனுள் இருந்த ஓலைக் குறிப்பினைக் கொண்டு அன்னைக்கு தினமும் பூசைசெய்யும் முறையும், அன்னைக்கு படைக்குப் பொருட்கள் ஆயிரம் ஆக இருக்க வேண்டும் எனவும் குறிக்கப்பட்டிருந்தது.

இக்குறிப்பின் படியே தற்போது பூசை முறை நடைபெற்று வருகிறது.

வழிபாட்டு முறை

முன்பு மன்னன் தினமும் செய்து வந்த பூசை முறை மாறாமல் அன்னையின் ஆசியோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதம் (ஆங்கிலம் மே மாதம் அல்லது ஜூன் மாதம்) வளர்பிறையில் அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு அன்னை ஆயிரங்காளியை பேழையிலிருந்து எழுந்த அருள செய்யும் போது அன்னைக்கு படைக்க பழவர்க்கங்கள் வகைக்கு ஆயிரம் கொண்டு வரும் பொருட்டு அருள்மிகு அபிராமி அம்மன சமேத அருள்மிகு இராஜ சோளீச்சுரர் திருகோயிலிருந்து திரளான மக்கள் வெள்ளம் சூழ தங்கள் கரங்களில் பழ தட்டுகளை ஏந்தி கோயிலை வலம் வரும் போது அதிர்வேட்டு முழங்கும் மேளதாளம் ஒலிக்க, வேதமந்திரம் முழங்க தாரை தப்படை முழங்கவும் இளைஞர் சிலம்பாட்டம் போட்டு வர அதி விமரிசையாக அலங்காரமாய் வரிசைபுறப்பட்டு வீதிபல சுற்றி அம்மனின் ஆலயத்தை அடைந்து அன்னையின் முன் ரசவர்க்கம், சித்திரான்னம், பள்ளயம், தளியல் பலவும் போடப்பட்டு இருக்கும். அதனுடன் அணி அணியாய் கொண்டு வரப்பட்ட பழவர்க்கம் சேர்ந்து அன்னைக்கு தீபாராதனை செய்விக்கப்படும். அப்போது வான் அதிர வெடி முழக்கம், மேளதாள முழக்கம் மங்கல மணி ஓசையும் வேதமந்திர கோஷம், ஒலிக்க அன்னைக்கு படையல் செய்யப்படும். அப்பொழுது பக்தர்கள் தாயே தயாபரியே ஆயிரங்காளியே என்று ஜெயகோஷம் செய்து அன்னையின் தரிசனம் கஙட்டு பரவசத்துடன் அகம் மகிழ்ந்திடுவர்.